‘ஸ்டார்’ பின்னணியில் நடந்தது என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்

harish kalyan

‘ஸ்டார்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் குறித்து முதன்முறையாக ஹரிஷ் கல்யாண் பேசியிருக்கிறார். எளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் ‘ஸ்டார்’. இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், முதலில் இந்தப் படம் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க அறிவிக்கப்பட்டது. பின்பு கவின் நடிக்க தொடங்கி வெளியானது. ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து எந்தவொரு காரணமும் தெரியாமல் இருந்தது.

தற்போது ‘ஸ்டார்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்னவென்ற கேள்விக்கு ஹரிஷ் கல்யாண், “‘ஸ்டார்’ படத்தைச் சுற்றி பல விஷயங்கள் நடந்தது. சில விஷயங்கள் எனக்கு தெரிந்தது, சில விஷயங்கள் எனக்கு தெரிய வரவில்லை. அந்த தெரியாத விஷயங்கள் சம்பந்தப்பட்ட நபரால் எனக்கு தகுந்த வழியில் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அது மட்டும்தான் பிரச்சினையாக இருந்தது.

2020-ம் ஆண்டு ‘ஸ்டார்’ படத்தின் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டோம். கரோனா பிரச்சினைகளால் படத்தின் பணிகள் தாமதமானது. பின்பு ஒன்றரை ஆண்டுகளாக படம் குறித்து எந்தவொரு தகவலுமே இல்லை. பின்பு ‘ஸ்டார்’ படம் குறித்த அறிவிப்பு வந்தது. அதற்குப் பின்பு அந்தப் படம் குறித்து நான் எதுவும் கேட்கவில்லை.

இந்தப் படம் வேறொரு நாயகனை வைத்து செய்கிறோம் என்று யாரும் சொல்லவில்லை. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், முன்பு, பின்பு என்ன நடந்தது என்று தெரியும். அந்தப் படம் தொடங்கப்படும் முன்பு என்ன நடந்தது என்று சொன்னால் யாரையோ குற்றம் சொல்வது போல் இருக்கும்.

வேலை என்பதை கடந்து மனித உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பு அளிக்கிறேன். வேலை முக்கியம் தான், அதற்காக மட்டும் பொய்யாக ஒருவரிடம் பழக முடியாது. ‘ஸ்டார்’ ட்ரெய்லர் வரும் போது ஒன்று சொன்னார்கள், படம் வெளியானவுடன் ஒன்று சொன்னார்கள். அவை அனைத்தையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Share this story