நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை என்ன?... அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!

Ma su

நடிகர் ரஜினிகாந்த் வெறும் வயிற்றில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் சர்வதேச முதியோர் தினவிழா மற்றும் தமிழ்நாடு முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 975 இடங்கள் கொண்ட முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு 3 மாதம் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தேசிய முதியோர் மருத்துவமனையில் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்லாங்குழி, கேரம், பாடல்களை கண்டறிதல், தினசரி வாசிப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது, தமிழ்நாடு அதிகமான முதியோர்களைக் கொண்ட மாநிலமாக உள்ளது, இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதியோர்களுக்கான பிரத்யேக மருத்துவமனை கிண்டியில் உள்ளது. இதுவரை 1 லட்சத்து பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள் இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று உலகம் முழுவதும் முதியோர் பராமரிப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது” என கூறினார்.


இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, ”ரஜினிகாந்த் பீரியாடிக் செக்கப்பிற்காக மருத்துவமனை சென்றுள்ளார். வெறும் வயிற்றில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று முறை அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையிடம் பேசி விசாரித்துள்ளோம், விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Share this story