‘கங்குவா’ வெளியீட்டு திட்டம் என்ன?
சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். முதலில் இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ‘கங்குவா’ வெளியீட்டில் மாற்றம் இருப்பது உறுதியானது. இதனை சூர்யா மற்றும் ஞானவேல்ராஜா இருவருமே ‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழாவில் உறுதிப்படுத்தினார்கள்.
தற்போது 2024-ம் ஆண்டு இறுதிக்குள் படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறது படக்குழு. அனைத்து மொழிகளிலும் வெளியிட இருப்பதால், சரியான தேதியை தேர்வு செய்ய விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது. மேலும், அதே தேதியில் இந்தியிலும் வெளியிட இருக்கிறார்கள்.மல்டிப்ளக்ஸ் சங்கத்திடம் ‘கங்குவா’ வெளியீடு குறித்த பேச்சுவார்த்தை முடிவு பெற்றிருக்கிறது. இதன்படி ‘கங்குவா’ இந்தி பதிப்பு 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியில் ‘கங்குவா’ வெளியீடு பிரம்மாண்டமாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.