பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு எப்போது..?

பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் ‘ஸ்பிரிட்’. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தான் தொடங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
’ஸ்பிரிட்’ படத்துக்கு முன்னதாக, ‘ஃபாஜி’ மற்றும் ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களை முழுமையாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் பிரபாஸ். ஏனென்றால் ‘ஸ்பிரிட்’ படத்துக்காக தனது உடலமைப்பை மாற்ற முடிவு செய்திருக்கிறார். இதற்காக 2 மாதங்கள் முழுமையாக டயட், உடற்பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். மேலும், இப்படத்துக்காக எந்தவித டூப்பும் இல்லாமல் சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என பிரபாஸிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. அதற்கும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் பிரபாஸ். இதனால் ‘ஸ்பிரிட்’ படத்துக்காக ஒரே கட்டமாக தேதிகளைக் கொடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்.
அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2027-ம் ஆண்டு தான் வெளியாகவுள்ளது ‘ஸ்பிரிட்’. இப்படத்தில் பிரபாஸ் உடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை பூஷன் குமார் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்கா இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.