“இந்தி விழாவுக்கு என்னை எதுக்கு கூப்பிட்டீங்க” - கடுப்பான மீனா
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது விழா அபுதாபியில் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை மொத்தம் மூன்று நாட்கள் நடந்தது. இதில் பல்வேறு இந்திய திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் முதல் நாளான செப்டம்பர் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய தென்னிந்திய மொழிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் தமிழ் படங்களில் சிறந்த படத்திற்கான விருது ஜெயிலர் படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது பொன்னியின் செல்வன்-2 படத்திற்காக விக்ரமுக்கும், அதே படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது மணிரத்னத்துக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராய்-க்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான விருது ஜெயம் ரவிக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த வில்லனுக்காக விருது மார்க் ஆண்டனி படத்திற்காக எஸ்.ஜே.சூர்யாவுக்கும் சிறந்த பெண் துணை கதாபாத்திரத்திற்கான விருது சித்தா படத்திற்காக சஹஸ்ர ஸ்ரீ-க்கும் வழங்கப்பட்டது. அதோடு சமந்தாவிற்கு இந்தாண்டிற்கான சிறந்த பெண் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தென்னிந்திய பிரபலங்கள் மணிரத்னம், ஏ.ஆர் ரஹ்மான், அட்லீ, சமந்தா என பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் மீனாவும் இதில் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் மீனாவை பேச அழைத்தனர். மீனாவும் பேச சென்றபோது, அங்கிருந்த செய்தியாளர்கள் ஒருவர், “இந்தியில் பேசுங்கள்” என்றார். உடனே கடுப்பான மீனா, இது இந்தி விழாவா? இந்தியில்தான் பேசணுமா? அதுக்கு எதுக்கு என்னை கூப்பிட்டீங்க? எனக் கேட்டார். பின்பு ஆங்கிலத்தில் பேசிய அவர், “தென்னிந்தியப் படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியர்களும் கலக்குகின்றனர். முதலில் நான் ஒரு தென்னிந்தியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.