"அவதூறுகளை பார்த்தும் அமைதியாக இருப்பது ஏன்?" - மனம் திறந்த ஆர்த்தி ரவி!

aarthi

என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பரப்பப்படும் அவதூறுகளை பார்த்து நான் அமைதியாக இருப்பது குற்றவுணர்வினால் அல்ல என்றும் திருமணம் என்கிற பந்தத்தை நான் மிகவும் மதிக்கிறேன் என்றும் ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறி தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஜெயம் ரவி அறிவித்தார்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனக்கு தெரியாமல் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், தன்னுடைய ஒப்புதல் இல்லாமலும் வெளிப்படுத்திய செய்தி குறித்து பேச ஜெயம் ரவியை சந்திக்க முயன்றும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளர் மூலம் அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயம் ரவி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், சென்னையில் உள்ள ஆர்த்தியினுடைய வீட்டில் உள்ள தன்னுடைய உடைமைகளை மீட்டுத்தரக் கோரி தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பரப்பப்படும் அவதூறுகளை பார்த்து நான் அமைதியாக இருப்பது குற்றவுணர்வினால் அல்ல. மாறாக, இந்த விஷயத்தில் முடிந்த அளவு என்னுடைய தன்மானத்தை நான் பாதுகாக்க முடிவு செய்திருக்கிறேன் என்று அர்த்தம்.

திருமணம் என்கிற பந்தத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் நான் புண்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலமே எனக்கு முக்கியம். உண்மையை மறைக்க என்னை தவறாக சித்தரிக்கிறார்கள். சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
 

Share this story