மும்பைக்கு ஷிஃப்ட் ஆனது ஏன்? - நடிகர் சூர்யா விளக்கம்

surya

 “மனைவி மற்றும் குழந்தைகளின் படிப்புக்காக மும்பைக்கு ஷிஃப்ட் ஆனோம்” என நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “ஜோதிகா தன்னுடைய 18 அல்லது 19 வது வயதில் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தார். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் அவர் சென்னையில் இருக்கிறார். 18 ஆண்டுகள் அவர் மும்பையிலும், 27 ஆண்டுகள் சென்னையிலும் இருந்திருக்கிறார். அவர் இங்கே என்னுடனும், என் பெற்றோருடனும் இருக்கிறார். தனது கரியரை இங்கே அமைத்துக் கொண்டார். அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு இங்கே சென்னையில் இருக்கிறார்.

இப்படியிருக்கும்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தனது சொந்த ஊரான மும்பையில் தனது பெற்றோருடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி, ஓர் ஆணுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ, அதேபோல பெண்ணுக்கும் அந்த தேவைகள் எல்லாம் இருக்கிறது. எனக்கு இது மிகவும் தாமதமாக தான் புரிந்தது. அவருக்கும் சுற்றுலா செல்ல வேண்டும், அவருக்கும் நண்பர்களை சந்திக்க வேண்டும், அவருக்கும் பொருளாதார சுதந்திரம் வேண்டும், அவருக்கும் மரியாதை தேவை, எல்லாமே அவருக்கும் தேவை.

 
அப்படியிருக்கும்போது அவர் மட்டும் ஏன் பெற்றோருடன் நேரத்தை செலவிடக்கூடாது? அவருக்கு பிடித்ததை செய்யக் கூடாது? அப்படியென்றால் அவர் எப்போது இதையெல்லாம் செய்வார் என்ற கேள்வி உண்டு. ஒரு நடிகராக ஜோதிகாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல சென்னையில் ஒன்றோ, இரண்டோ தான் ஐபி (IB SCHOOLS) பள்ளிகள் உண்டு. மும்பையில் அந்த பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். இந்த காரணங்களுக்காக மும்பையில் இடம்பெயர்ந்தோம்” என்றார்.

Share this story