‘கஜினி 2’ உருவாகுமா ? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

‘கஜினி 2’ எப்போது என்ற கேள்விக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ திரைப்படம் மார்ச் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக அளித்த பேட்டியில் ‘கஜினி 2’ குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். “எனக்கு சில யோசனைகள் உள்ளன. இது குறித்து விவாதித்தோம். அனைவருமே அவர்களுடைய படங்களில் மும்முரமாக இருக்கிறோம். நேரம் அமையும்போது அமர்ந்து பேசி முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
‘கஜினி 2’ படத்தை உருவாக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அல்லு அரவிந்த். இது குறித்து தனது விருப்பத்தினை சூர்யா, ஆமிர்கான் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ‘கஜினி 2’ படத்தினை ஒரேசமயத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக்கவுள்ளார்கள். இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளது.
ஆமிர்கானை சந்தித்து பேசினீர்களா என்ற கேள்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ், “மும்பைக்கு வந்த போது, ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு தொடங்கும் முன்பு சந்தித்து பேசினேன். அவருடைய படப்பிடிப்பில் சந்தித்தேன். இருவரும் சில விஷயங்கள் பேசினோம். பின்பு அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிலின் மூலம் ‘கஜினி 2’ குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஏ.ஆர்.முருகதாஸ் இருப்பது தெரிகிறது.