பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பெண்...!

ak

பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற துபாயை சேர்ந்த ரசிகை மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 
 
மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்கு திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பெண்மணி ஒருவர் வந்துள்ளார். அவரிடம் ஆதித்யா ராய் கபூர் வீட்டுப் பணிப்பெண் விசாரித்துள்ளார். அப்போது, ஆதித்யா ராய் கபூர் தன்னை சந்திக்க வரும்படி அழைப்பு விடுத்திருந்ததாகவும், அவருக்கு உடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ak

அதற்கு அடுத்த சிறிது நேரத்தில் ஷூட்டிங் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய ஆதித்யா ராய் கபூர், அந்த பெண்ணை பார்த்து விட்டு அவரை யார் என்றே தெரியாது என கூறியுள்ளார்.  அதைத்தொடர்ந்து ஆதித்யா ராய் கபூர் தரப்பில் அளித்த புகாரின் பேரில்  காவல்துறையினர் அந்த பெண்மணியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் கசாலா ஜகாரியா சித்திக் (Gazala Jhakaria Siddique) என்பதும் துபாயை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
  
அவர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் குற்றம் புரியும் நோக்கத்துடன் ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்கு வந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் கடந்த 20 ஆம் தேதி அத்துமீறி நுழைய முயன்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தற்போது ஆதித்யா ராய் கபூர் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைய முயன்றது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story