“கமல்ஹாசன் சாருடன் இணைந்து நடித்தது மிகவும் ஸ்பெஷல்” … ‘தக் லைஃப்’ விழாவில் நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

கமல்ஹாசன் படம் பார்த்து வளர்ந்த நான் இன்று அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் ஸ்பெஷல்” என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிம்பு, “இந்தப் படம் எனக்கு ஒரு கனவாக இருக்கிறது. மணிரத்னம், என்னுடைய குரு கமல், ரவி கே சந்திரன் என எல்லோரும் ஒரு படத்தில் இணைவது நம்பமுடியாத ஒன்று.
இந்தப் படத்தில் ஆரம்ப கால படப்பிடிப்பு கடினமாக இருந்தது. முன்னதாக மணிரத்னத்துடன் இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தேன். சில நாட்களுக்கு பின்பு மணிரத்னம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்தேன். சிறு வயதில் இருந்து நடித்து வருகிறேன். ஆனால் கமல்ஹாசன் படம் பார்த்து வளர்ந்த நான் இன்று அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் ஸ்பெஷல். கமல் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். ஊக்கப்படுத்தினார்.
அவருக்கு பக்கத்தில் எனக்கு இருக்கை என்பது அவருடைய பெருமிதத்தை காட்டுகிறது. இந்தப் படம் வித்தியாசமான முயற்சியாக இருக்கும். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் - கமல் சேர்ந்துள்ளனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி” என்றார்.