"நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்" - வேட்டையன் ரஜினி குறித்து அமிதாப்பச்சன் பெருமிதம்!
"ரஜினிகாந்த் நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்" என்று வேட்டையன் ஆடியோ வெளியீட்டு விழாவில், மும்பையில் இருந்தபடி வீடியோ கால் மூலம் பேசிய அமிதாப்பச்சன் பெருமிதத்துடன் தெரிவித்தார். இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தற்போது டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத நடிகர் அமிதாப்பச்சன் வீடியோ மூலமாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், "நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் மிக நெருக்கமான ஒருவர். இதற்கு முன்னதாக இந்தியில் இணைந்து நானும், ரஜினியும் நடித்துள்ளோம். அதனைத் தொடர்ந்து வேட்டையன் படத்தில் இணைந்து நடித்துள்ளோம்.
வேட்டையன் திரைப்படம் நான் நேரடியாக தமிழில் நடிக்கும் படம். எனக்கும் மிக முக்கியமான படம் இது. இப்படம் வெற்றியடைய வேண்டும். ரஜினிகாந்த் நல்ல மனிதர், நல்ல நண்பர். நீங்கள் எங்களுக்கு கிடைத்த பரிசு. ரஜினிகாந்துடன் இந்தி படத்தில் நடித்தபோது ஒரு அனுபவம் உள்ளது.
படப்பிடிப்பு இடைவெளியின் போது நான் குளிர்சாதன அறையில் அமர்ந்து கொண்டேன். ஆனால் அவர் சாதாரணமாக, எளிமையாக படப்பிடிப்பு தளத்திலேயே நாற்காலியில் அமர்ந்திருந்தார். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதனை தொடர்ந்து நானும் அவரைப்போலவே அமர்ந்தேன்” என்று அமிதாப்பச்சன் தெரிவித்தார்.
பின்னர் நடிகை ரோகினி பேசுகையில், "ரசிகர்களுடன் பார்த்து ரசிச்சிட்டு இருந்த ஒரு ரசிகை நான். கமல் ரஜினி அவர்களுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். கமல் உடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ரஜினியுடன் நடிக்க ஆசைப்பட்டேன் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வேட்டையன் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. முதல் நாள் சூட்டில் டயலாக் எனக்கு வரவில்லை. நீங்க எங்க கூட எல்லாம் நடிக்க மாட்டீங்க கமல் கூட தான் நடிப்பேன் என்று ரஜினி சார் கலாய்த்தார். ரஜினி சாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
ஒவ்வொரு காட்சிக்கும் நடிக்கும்போது அவருடைய உழைப்பை நான் பார்த்தேன். வேட்டையன் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கக்கூடிய நல்ல படம். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய சக்தியான ரஜினிகாந்துடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த படம் மிகப்பெரிய ஒன்றாக வரும்.