இசை நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட இளைஞர்கள் - ஆதி விளக்கம்

hip hop aadhi

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்து, தானே தயாரித்துள்ள படம்‘கடைசி உலகப்போர்’. இப்படத்தில் அனகா, நாசர், நட்ராஜ், சிங்கம்புலி, முனிஷ்காந்த், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா 11.9.2024 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இணைந்து சிறப்பு விருந்தினராக இயக்குநர் சுந்தர்.சி பங்கேற்றார். 

இந்நிகழ்ச்சியில் ஆதி பேசுகையில், “முதல் இரண்டு உலகப்போர் நடந்து முடிந்துவிட்டது. இப்போது இருக்கின்ற டெக்னாலஜிக்கு மூன்றாவதாக ஒரு உலகப்போர் வந்தால் அது இந்த உலகத்தின் கடைசி போராக இருக்கும் என்று நினைகின்றேன். ‘அழிந்து போய்விடும் உலகம் நாம் அனைவரும் சண்டையிட்டுக்கொண்டால்’ என்ற கருத்தை வைத்து இப்படத்திற்கு கடைசி உலகப்போர் என பெயர் வைத்துள்ளோம். இப்படத்தை ஜானராக சொன்னால் ஆக்‌ஷன், காதல் மற்றும் ஆழமான கருத்தை கொண்டு படத்தை எடுத்துள்ளோம். படத்தில் ஒன்பது பாடல்கள் உள்ளது. ஆனால், அந்த பாடல்கள் அனைத்தும் காட்சிகளின் பின்னணியில் ஒலிபரப்பாகும் வகையில் அமைந்துள்ளது. இந்த படத்தை ஒரே வரியில் சொன்னால் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவவாக்கியர் சித்தரின் ‘கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா....’ என்ற பாட்டுதான் இந்த படத்தின்  மையக்கருத்து” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர், அண்மையில் ஹிப் ஹாப் ஆதி நடத்திய இசைக் கச்சேரியில் இளைஞர்களிடையே நடந்த மோதல் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆதி, “அந்த இசைக் கச்சேரியில் 25,000 பேருக்கு மேல் கலந்துகொண்டனர். அதில் நடனமாடும்போது ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டு 10 பேர் சண்டை போட்டனர். அவர்களை உடனே அங்கிருந்து அனுப்பிவிட்டோம். அங்கிருந்த மற்ற யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. எனக்கே அந்த சண்டை குறித்து தாமதமாகத்தான் தெரிந்தது. பயப்படக்கூடிய அளவிற்கு அதில் ஒன்றும் இல்லை” என்றார்.

Share this story