ஷாரூக்கானுக்காக புதிய கதை… பாலிவுட் படத்தின் பணிகளை தொடங்கிய அட்லி…
பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து இயக்கும் படத்தின் பணிகளை அட்லி துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார். சூப்பர் ஹிட்டடித்த இப்படங்களின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார் அட்லி. இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தையும் அட்லி இயக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்க உள்ளார். இதையடுத்து மும்பைக்கு சென்ற அட்லி, நடிகர் ஷாரூக்கானை சந்தித்து படத்தின் கதை குறித்து விவாதித்ததாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம் ஷாரூக்கான் படத்தின் முதற்கட்ட பணிகளை அட்லி செய்து வருவதாகவும் தகவல் கசிந்தது.
இந்நிலையில் அட்லியின் மனைவி பிரியா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், உதவி இயக்குனர்களுடன் அட்லி விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு கையில் ஹெலிகாப்டர், கார் பொம்மைகளை வைத்துக் கொண்டு கதையை விளக்குவது போன்று உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது ஷாரூக்கான் படத்தின் பணிகளில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. அதேநேரம் அட்லி சொன்ன இரண்டு கதைகளும் ஷாருக்கானுக்கு பிடிக்கவில்லை. அதனால் புதிய கதையை தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ எல்லாம் இறுதியான பிறகு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.