‘ஆஸ்கர்’ ரேஸில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படக்குழு அறிவிப்பு…
சூர்யாவின் சூரரைப்போற்று படம் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுவதாக படக்குழு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘சூரரைப்போற்று’. ஏழைகளும் விமானத்தில் பயணிக்கலாம் என்ற கதைக்கரு இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து வெற்றிப்பெற்ற இப்படம் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றது.
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் நேரடியாக இந்த படம் ஓடிடியில் ஒளிப்பரப்பானது. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலக சினிமாக்களின் கிரீடம் என சொல்லப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கர் விருதுகள் பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காரணமாக இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடலாம் என அறிவித்துள்ளது.
இதனால் ‘சூரரைப்போற்று’ படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளர். இதையடுத்து சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இப்படம் போட்டியிடுகிறது. சூரரைப்போற்று கண்டிப்பாக ஆஸ்கர் பட்டியலில் இடம்பெறும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் படக்குழுவினர்.