கவியரசர் கண்ணதாசன் செய்த சில தரமான ‘சம்பவங்கள்’.!?
எத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழ் திரையுலகில் வந்து போய் இருந்தாலும் கவியரசு கண்ணதாசன் போல் உச்சம் தொட்டவர்கள் இன்னும் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
வார்த்தைகளில் விளையாடுவார், வார்த்தை பொருட்களில் விளையாடுவார். சினிமா பாடலில் இலக்கியம் சொல்வார். எளிய மனிதர்களின் வாழ்வை சொல்வார். தத்துவம் சொல்வார், இறைவனை வம்புக்கிழுப்பார். அரசியலை தொடுவார். ஆன்மீகம் சொல்வார். காதலர்களின் ஊடலைச் சொல்வார். கூடலைச் சொல்வார்.
எத்தனை எத்தனை விதங்கள்.

ஆனால் அன்று கண்ணதாசனை அழைத்து பாடல் எழுத வைப்பதற்குள் கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும். குறித்த நேரத்தில் வந்து விடமாட்டார். அப்படி வந்துவிட்டால் சுட்சுவேஷனை சொன்னவுடன் வரிகள் அருவியாய் கொட்டும். சுட்சுவேஷன் சொல்லியும் கண்ணதாசனுக்கு வரிகள் உடனே வராத கதைகளும் உண்டு. ஆனாலும் அதிலும் சம்பவம் பண்ணி விடுவார் கண்ணதாசன்.
கண்ணதாசன் பண்ணிய தரமான சம்பவங்கள் சில.
கண்ணதாசனின் சம்பவம் 1
ரவிச்சந்திரன், முத்துராமன், விஜயகுமாரி நடிக்கும் ஒரு படத்திற்கு பாடல் எழுத அழைக்கப்படுகிறார் கண்ணதாசன். கண்ணதாசன் அங்கு செல்கிறார். அங்கு அந்தப்படத்தின் இயக்குநர் A.R.தாஸ் இருக்கிறார். இயக்குநர் பாடலின் சுட்சுவேஷனை சொல்லுகிறார். பிரிந்து போன தன் காதலியை நீண்ட நாள் கழித்து அந்த காதலன் பார்க்கிறான், ஆனால் காதலி விதவை ஆகியிருக்கிறாள். காதலன் அவளிடம் சென்று பேசப் போக, அவள் பேசாமல், அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் விலகி விலகி செல்கிறாள். அப்பொழுது காதலன் பாட ஆரம்பிக்கிறான். இதுதான் சுட்சுவேஷன் என்று இயக்குனர் தாஸ் கண்ணதாசனிடம் சொல்கிறார்.
கண்ணதாசனுக்கு சட்டென வரிகள் வரவில்லை. அதனால் பாடல் பற்றி பேசுவதை விட்டு வெற்றிலை போட ஆரம்பிக்கின்றார். பின் வேறு ஏதோ ஊர் கதைகள் எல்லாம் பேச ஆரம்பிக்கிறார். நீண்ட நேரம் பேசிவிட்டு, வெற்றிலை எல்லாம் போட்டு முடித்து விட்டு கண்ணதாசன், சரி சுட்சுவேஷன் சொல்லிட்டீங்கல்ல நாளைக்கு பாக்கலாம் எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

கண்ணதாசனை வாசல் வரை வந்து வழி அனுப்ப வருகிறார் இயக்குநர். அவர் கிளம்பும் நேரத்தில் இயக்குநர் கண்ணதாசனிடம் சொல்கிறார், அண்ணே அந்த படத்தில் ஹீரோயின் பெயர் அமுதா, படத்தின் பெயரே “அமுதா” தான், அந்த பெயர் வர மாதிரி பாட்டு இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்கின்றார் தாஸ்.
அடுத்த விநாடியே, வாசல் படியில் நின்று கொண்டிருந்த கண்ணதாசன் வாயிலிருந்து வார்த்தைகள் கொட்டுகிறது.
அன்பே அமுதா…
நீ பாலமுதா…
சுவைத் தேனமுதா…
இல்லை பாற்கடலில் பிறந்த சொல் அமுதா…
உந்தன் சொல் அமுதா…
இல்லை சுவை அமுதா… கொஞ்சம் நில் அமுதா…
அதைச் சொல் அமுதா…
மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதனின் இசையில் உருவான இந்த பாடலை கேட்டால் நாம் இப்படி பாடுவோம்.
அன்பே கண்ணதாசா…
உந்தன் சொல் அமுதா…
இல்லை சுவை அமுதா…
சுவைத்தேனமுதா…
கண்ணதாசனின் சம்பவம் 2
படத்தின் தேவர் பிலிம்ஸ் தயாரித்த “குடும்பத்தலைவன்” இசை
கே.வி. மகாதேவன். ஹீரோ எம்ஜிஆர். இயக்குநர் எம்.ஏ.திருமுகம், வருடம் 1962.
எம்ஜிஆர் படத்தின் பாடல்கள் என்றாலே இசையமைப்பாளரிலிருந்து, கவிஞர்களிருந்து அனைவரும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.
கே.வி.மகாதேவனும், இயக்குநர் எம்.ஏ.திருமுகமும் பாடல் கம்போஸிங்க்கிற்காக எக்மோரில் உள்ள அட்லாண்டிக் ஓட்டலில் தங்கியுள்ளனர். ஒரு டூயட், அருமையான ஒரு டியூன் கிடைத்துவிட்டது. கண்ணதாசன் அழைக்கப்படுகிறார்.
கண்ணதாசன் ஹோட்டலுக்கு சென்று, கே.வி.மகாதேவனிடம் பாடல் சிச்சுவேஷனை கேட்கிறார். உடன் இயக்குனர் திருமுகம் இருக்கிறார், என்ன காரணமோ தெரியவில்லை, அந்த பாடலுக்கு பல்லவியின் முதல் வரி கண்ணதாசனுக்கு தோன்றவே இல்லை. முதல் வரி வந்தால் போதும் பின் கண்ணதாசனுக்கு கடைசி வரி வரை கவிதை கொட்டி விடும். கொஞ்சம் கேட்ச்சியாக ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும். அதேசமயம் எம்ஜிஆருக்கும் பிடிக்க வேண்டும் என்று யோசிக்கிறார் கண்ணதாசன். ஒன்றும் பிடிபடவில்லை சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சரி நாளை பார்க்கலாம் நல்ல பல்லவி ஏதாவது கிடைக்கும் என்று சொல்லிவிட்டு கண்ணதாசன் அங்கிருந்து கிளம்புகிறார்.

கண்ணதாசன் ஹோட்டலின் வாசலுக்கு வர அப்பொழுதுதான் எம்ஜிஆர் அந்த கம்போசிங்க்கிற்காக அந்த ஹோட்டலுக்கு வருகிறார். வந்து காரில் இருந்து இறங்குகிறார். அந்த சமயம் ஹோட்டலில் தங்கியிருந்த சில வெள்ளைக்காரர்கள் வெளியே கிளம்பி வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் காரில் இருந்து எம்ஜிஆரை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அந்த அந்த வெளிநாட்டு காரர்களுக்கு எம்ஜிஆர் யார் என்பதோ, அவர் ஹீரோ என்றோ தெரியாது. திரும்பத் திரும்ப அவரை பார்த்து கொண்டு செல்கிறார்கள். எம்ஜிஆரின் தோற்றம் அந்த அளவுக்கு அந்த வெளிநாட்டுக்காரர்களை கவர்கின்றது.
அதை கண்ணதாசன் கவனிக்கிறார். நொடியில் அவருக்குள் ஒரு பல்லவி தோன்றுகிறது.அந்த பல்லவிதான்
“கட்டான கட்டழகு கண்ணா உன்னை காணாத கண்ணும் ஒரு கண்ணா”
பிறகென்ன பட்டாடை கட்டி வந்த மைனா…
என வரிகள் வந்து விழுந்து, நொடியில் பாடல் முடிந்தது.
சம்பவம் 3
அதே 1962 ஆம் ஆண்டு, அதே தேவர் பிலிம்ஸ் படம் தான். ஹீரோ எம்ஜிஆர்தான். அதே எம்.ஏ. திருமுகம் தான் இயக்குநர். அதே கே.வி.மகாதேவன் தான் இசை.
படம் “தாயைக் காத்த தனயன்” கண்ணதாசன் செய்த சம்பவம் ஒரு ஏடாகூட சம்பவம்.
படத்தின் ஹீரோயின் சரோஜாதேவியின் அறிமுக சோலோ சாங் அது.
காட்டிற்குள் வரும் சரோஜாதேவி காட்டின் ஏகாந்தம் பற்றி ஒரு பாடல் பாட வேண்டும் இதுதான் சிச்சுவேஷன்.
வழக்கமாக இயற்கையின் அழகை வர்ணிப்பதாக எழுத கண்ணதாசனுக்கு விருப்பமில்லை. வித்தியாசமான வர்ணனையாக வரிகள் வேண்டும். எதுவும் சிக்கவில்லை.

அப்பொழுது மும்பை போயிருந்தார் கண்ணதாசன். “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு” என வாழ்ந்தவராச்சே. மது,மாது இல்லாமல் அவரால் இருக்க முடியாது. கண்ணதாசன் தன் நண்பருடன் ஒரு கேளிக்கை விடுதிக்கு செல்கின்றார்.
கண்ணதாசன் அறைக்குள் நுழைகின்றார். அந்த வட இந்திய பெண் கண்ணதாசனைப் பார்த்தவுடன். நொடிப்பொழுதில் முற்றும் துறந்து, மஞ்சத்தில் விழுந்து, மலராய் மலர்ந்து, கரப்பான் பூச்சியாய் கவிழ்ந்து கிடக்கிறாள்.
“அந்த” மாதிரி பெண்கள் என்றாலும் மினிமம் கொஞ்சம் அச்சம், மடம், நாணத்துடனே பார்த்து பழகிய கண்ணதாசானுக்கு, திறந்த மைதானத்தில் விளையாட ஆசையில்லாமல் வெறுத்துப் போய் வெளியெறுகிறார்.
மூடே வரவில்லை கண்ணதாசனுக்கு, ஆனால் பாடலுக்கு வரிகள் வந்தது.
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை…
இங்கு காவல் காக்க கடவுளன்றி ஒருவரும் இல்லை…
காட்டி காட்டி மறைத்துக்கொள்ளும் சுயநலம் இல்லை…
இதில் கலந்து விட்டால் காலநேரம் தெரிவதும் இல்லை…
சம்பவங்கள் தொடரும்…
-ஜேம்ஸ் டேவிட்