கண்ணதாசன் அரசியல் அனுபவம்… அதை சாமர்த்தியமாக சினிமா பாடலில் கொண்டுவந்த தரமான சம்பவம்!
கண்ணதாசனின் சம்பவம் 4
சினிமாவில் வெற்றியாளராக வலம் வந்த அளவிற்கு கண்ணதாசனால் அரசியலில் வெற்றியாக வலம் வர முடியவில்லை.
அந்தக் காலகட்டத்தில் திரையுலகில் பிரபலமான பலரும் தி.மு.கவில் தான் இருந்தனர். கண்ணதாசனும் தி.மு.கவில் தான் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். கல்லக்குடி மும்முனைப் போராட்டத்தில் எல்லாம் கலந்து கொண்டு சிறை சென்றார்.
1961ஆம் ஆண்டு திராவிட நாடு சம்பந்தமாக அண்ணாவுக்கும் ஈ.வி.கே. சம்பத்துக்கும் பிரச்னை எழுந்தது. இதனால், ஈ.வி.கே. சம்பத் தி.மு.கவிலிருந்து விலகினார். அப்போது அவருடன் கண்ணதாசனும், சிவாஜியும் தி.மு.க-விலிருந்து வெளியேறினர். ஈ.வி.கே சம்பத் ஆரம்பித்த தமிழ் தேசியக் கட்சியில் இணைந்தனர்.

பின் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தமிழ் தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட ஒன்பது பேரும் தோல்வி அடைந்தனர். கண்ணதாசனும் தான் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் தோல்வியடைந்தார். காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
தான் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்று பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த கண்ணதாசன், அந்த தோல்வியில் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்.
தான் வெற்றி பெற்று கோட்டைக்குள் சென்று இருக்க வேண்டும். ஆனால் யார் யாரோ கோட்டைக்குள் சென்றுவிட்டனர். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த மக்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவே இல்லை. ஆனால் ஒரு நாள் காலம் மாறும் என்னை புரிந்து கொள்வார்கள்.

தன் இந்த மனத்தாங்கலை அப்படியே ஒரு படத்தில் வரும் பாடலில் கொண்டு வந்தார் கண்ணதாசன்.
அது சிவாஜி நடித்த “பலே பாண்டியா” படம் இயக்குனர் பி.ஆர் பந்துலு. இசை எம்எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி. இந்த படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடம். கதைப்படி நல்லவரான சிவாஜி சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு சிறையில் தள்ளப்படுவார். இந்த சிச்சுவேஷனை அப்படியே தன் அரசியல் சூழ்நிலைகளுக்கு கனகச்சிதமாக பொருத்தி கண்ணதாசன் ஒரு பாட்டை எழுதினார்.
பாடலின் வரிகளில் கண்ணதாசன் செய்த சம்பவத்தைப் பாருங்கள்.
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே…
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே…
பேரெடுத்து உண்மையைச் சொல்லி
பிழைக்க முடியல்லே…
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
பேதம் தெரியல்லே…
நான் இருக்கும் இடத்தினிலே
அவன் இருக்கின்றான்…
அவன் இருக்கும் இடத்தினிலே
நான் இருக்கின்றேன்…
நாளை எங்கே யாரிருப்பார்
அதுவும் தெரியல்லே…
இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்
பேதம் தெரியல்லை…
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே
கலங்கி நிக்குதடா…
அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு
வெளியில் நிற்குதடா…
மூடருக்கும் மனிதர் போல
முகம் இருக்குதடா…
மோசம் நாசம் வேஷமெல்லாம்
நிறைந்திருக்குதடா…
காலம் மாறும் வேஷம் கலையும்
உண்மை வெல்லுமடா…
கதவு திறந்து பறவை பறந்து
பாடிச் செல்லுமடா…
அட என்னத்தச் சொல்வேண்டா
தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா…

கடைசியில் விரக்தியாக பாடலை முடிக்கின்றார். அதனால்தான் என்னவோ கண்ணதாசனால் கடைசிவரை அவரால் அரசியலில் கோலோச்சவே இயலவில்லை. பின் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பின் கண்ணதாசனுக்கு மரியாதை செய்ய அவரை அரசவை கவிஞராக்கினார். இதுதான் கண்ணதாசன் அரசியலில் வகித்த உச்சபட்ச பதவி.
கண்ணதாசன் தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியை இன்னொரு படத்தில் வரும் பாடலிலும் வெளிப்படுத்தினார். அந்த படம் ஏவிஎம் தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த “அன்னை” என்னும் படமாகும். சந்திரபாபுவின் எவர்கிரீன் ஹிட்ஸ்ஸில் மிக முக்கியமான பாடல்கள் இந்த பாடல்.
எலெக்ஷனில் ஜெயித்தால் நீங்களெல்லாம் புத்திசாலிகளா? தோத்துட்டா நாங்கள் எல்லாம் முட்டாள்களா? நீங்கள் எல்லாம் பணத்தை செலவழிச்சு தானே தேர்தலில் வெற்றி பெற்றீங்க? என்று கண்ணதாசன் தன் எதிரிகளை பார்த்து இந்த பாடல் மூலமாக கேட்டிருப்பார்.
“புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்”
இனி இந்த பாடலைக் கேட்டால் இப்பொழுது நடக்கும் தேர்தல்கள் கூட நமக்கு ஞாபகத்திற்கு வரும்.
சம்பவம் 5
இந்த அரசியல் தோல்வி அவரின் மனதை மிகவும் பாதித்தது. விரக்தியாகி விட்டார். அரசியலை விட்டே விலகலாம் என்று கண்ணதாசன் முடிவு செய்தார். அந்த முடிவிற்கு பின் தான் அவர் மைண்ட் சற்று ரிலாக்ஸ் ஆகியது.
தான் பட்ட கதையையும், அரசியல் தனை சுட்ட கதையையும் ஒரு படத்தில் பாட்டாக எழுதி விட்டார். படத்தில் சிச்சுவேஷனே வேறு அதை எப்படியெல்லாம் இரட்டை அர்த்தத்தில் எழுதியிருக்கிறார் பாருங்கள்.
படம் “ஆலயமணி” ஹீரோ சிவாஜி, இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடல் இன்றும் எவர் க்ரீன் ஹிட்டான, “சட்டி சுட்டதடா கை விட்டதடா” பாடல்.
படத்தின் ஹீரோ சிவாஜி பணக்காரர், சற்று ஆணவமும் பொசஸிவ்நெஸும் கொண்டவர். சரோஜா தேவியின் காதலுக்காக எஸ்.எஸ்.ஆரை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் இருப்பார். ஒருநாள் உண்மைகளை தெரிந்து கொண்டு விரக்தியின் உச்சத்தில் இந்த பாடலை பாடுவார்.
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா…
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா…
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா…
“இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா” என்றுதான் அரசியலில் ஊறிய அரசியல்வாதிகள் பலர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் சென்சிடிவ் ஆன கண்ணதாசனால் இந்த தோல்விகளை எல்லாம் அவ்வளவு டேக் இட் ஈசி ஆக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்பதைத்தான் இந்த வரிகள் சொல்கின்றன.
சம்பவங்கள் தொடரும்…
-ஜேம்ஸ் டேவிட்