விமானத்தில் கருகிய பத்ரகாளி நாயகி… துரத்திய சினிமா செண்டிமெண்ட்.!?
பொதுவாகவே திரையுலகில் ஒரு ஆண்ட்டி சென்டிமென்ட் உள்ளது. படத்தின் தலைப்பாக சில பெயர்கள் வைத்தால், அதிலும் குறிப்பாக துடியான கடவுள் பெயரோ, அல்லது சில சரித்திர வீரர்களின் பெயரோ படத்திற்கு தலைப்பாக வைத்தால், அந்த படத்தில் விபத்தோ அல்லது படத்தில் நடித்தவர்கள் யாராவது மரணமடையவோ செய்வார்கள், அல்லது அந்த படமே எடுக்க முடியாமல் போய்விடும் என்ற நம்பிக்கை உள்ளது.
அப்படித்தான் “திப்புசுல்தான்” திரைப்படமும் எடுக்க முயற்சித்து எடுக்கமுடியவில்லை. தொலைக்காட்சி தொடராக எடுக்கும் போது பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படமும், எம்ஜிஆர்,கமல் போன்றோர்கள் எடுக்க முயற்சித்து எடுக்கமுடியவில்லை. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடரும் கைவிடப்பட்டது. இப்பொழுது கூட மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் கொரோனாவால் தடைபட்டு நிற்கிறது.
பார்த்திபன் கூட “கருப்பண்ணசாமி” என படம் ஆரம்பித்து பின் சில பிரச்சினைகளால் அதை கைவிட்டார். ரஜினியின் “காளி” படத்தில் தீ விபத்தில் சில சண்டை கலைஞர்கள் இறந்தனர்.
இந்த சென்டிமென்ட் உண்மையோ பொய்யோ தெரியவில்லை.
ஆனால் “முரட்டுக்குத்து” “பல்லுபடாம” போன்ற தலைப்புகளுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை என்பது தான் விநோதம்.

சரி விசயத்திற்கு வருவோம். அப்படி ஒரு படம் தான் “பத்ரகாளி” 1976 ஆம் ஆண்டு “பத்ரகாளி” படத்தை டைரக்டர் திருலோகசந்தர் தயாரித்து இயக்கினார். கதாநாயகன் சிவகுமார் . கதாநாயகியாக நடித்தவர்
மிஸ் கேரளாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராணி சந்திரா. கிளைமாக்ஸ் உட்பட சில காட்சிகள் தவிர ஏறக்குறைய எல்லா காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டது.
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. துபாயில் கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு அக்டோபர் 12-ம் தேதி இந்தியா திரும்பினர் ராணிசந்திராவும் அவரின் தாயார் மற்றும் அவரின் இரண்டு சகோதரிகளும். அவர்கள் வந்த விமானம் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, எஞ்சின் கோளாறால் தீப்பிடித்து, விமான நிலையத்திலேயே விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
ராணிசந்திரா, அவரின் தாய் இரு சகோதரிகள் உட்பட விமானத்தில் பயணித்த நூற்றுக்கணக்கானோர் பலியாயினர்.

தமிழ் திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளானது. அப்பொழுது “பத்ரகாளி” என்ற பெயர் வைத்தது தான் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராணி சந்திராவின் மரணத்திற்கு காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டது.
“பத்ரகாளி” படத்தில் வரும் சிவக்குமார், ராணி சந்திரா நடித்த”கண்ணன் ஒரு கைக்குழந்தை” பாடல் இன்றுவரை எவர்கிரீன் ஹிட் பாடல்.
இந்தப் பாடல் பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
“பத்ரகாளி” இளையராஜாவின் இரண்டாவது படம்.
இந்த பாடல், இளையராஜாவின் இசையில் ஜேசுதாஸ் பாடிய முதல் பாடல். இளையராஜாவின் முதல் மெலோடி டூயட் பாடல்.
அந்த பாடலை பாருங்கள் ராணி சந்திராவின் அந்த அழகை.
“ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா”
-ஜேம்ஸ் டேவிட்