பாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் வெளியான பிகே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான ‘பிகே’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் வெவ்வேறு மதங்கள், அவற்றின் மாறுபட்ட கலாச்சாரங்கள் என இந்தியாவின் ஆகப் பெரும் நம்பிக்கைகளை பகடி செய்திருந்தனர். ஆகவே இப்படத்திற்கு எதிராகவும் பல கருத்துக்கள் எழுந்தன. இருப்பினும் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

படம் முடியும் போது அமீர் கான் உடன் ரன்பீர் கபூர் சிறப்புத் தோற்றத்தில் வருவார். தற்போது ரன்பிர் கபூர் நடிப்பில் பிகே படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியால் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்தின் தயாரிப்பாளர் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாகத்தில் அனுஷ்கா சர்மாவின் ஜோடியாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார். தற்போது அவர் இரண்டாம் பாகத்தில் இடம் பெறப்போவதில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லவேண்டும்.