சினிமா வேண்டாம்.. சீரியலே போதும்.. ‘எதிர் நீச்சல்’ இயக்குனர் அதிரடி !
சீரியலுக்காக சினிமா வாய்ப்புகளை மறுத்து வருவதாக ‘எதிர் நீச்சல்’ இயக்குனர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் புகழ்பெற்ற சீரியல் இயக்குனராக இருப்பவர் திருச்செல்வம். பல ஆண்டுகளாக சீரியல்களை இயக்கி வரும் அவர், கடந்த 2003-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிப்பரப்பாக ‘கோலங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரை இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் என அடுத்தடுத்து சீரியல்களை இயக்கியுள்ளார். இதில் அவர் இயக்கிய முதல் சீரியலான கோலங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
சின்னத்திரையில் இருந்த நடிகர் சமுத்திரகனி, திருமுருகன் ஆகியோர் இருக்கும்போது சமகாலத்தில் அவரும் பணியாற்றி வந்தார். சமுத்திரனி சினிமாவிற்கு சென்று நல்ல நிலையில் இருக்கையில், தற்போதும் சீரியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர், கோலங்கள் சீரியல் நன்றாக சென்றுக் கொண்டிருந்த போது எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நான் சீரியலை விட்டு விலகாமல் தொடர்ந்து பயணித்து வருகிறேன். காரணம் சீரியலை விட்டு விலக எனக்கு மனமில்லை. தற்போது நான் இயக்கி வரும் எதிர் நீச்சல் சீரியல் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கோலங்கள் சீரியலை விட எதிர் நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்று கூறினார்.