விரைவில் வெளியாகும் இளசுகளின் மனம் கவர்ந்த 'கனா காணும் காலங்கள்' சீசன் 3!
இளைஞர்கள் மத்தியில் பிரபலமான 'கனா காணும் காலங்கள்' தொடர் மூன்றாவது சீசன் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.: பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான 'கனா காணும் காலங்கள்', பள்ளி மாணவர்களின் கவலையற்ற வாழ்க்கை கொண்டாட்டங்களை கண்முன் கொண்டு வந்தது என்று கூறலாம். கனா காணும் காலங்கள் தொடரின் முதல் இரண்டு சீசன்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது 'கனா காணும் காலங்கள்' தொடரின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வெப் சீரியஸின் முதல் சீசனுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையிலும், அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான கோரிக்கைகள் குவிந்தது. இதனையடுத்து கடந்தாண்டு இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பானது. இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும், 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூன்றாவது சீசனை வெளியிட முடிவு செய்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, இந்த சீசனும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் , இன்றைய மாணவர்களின் வாழ்வின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், மற்றும் வலிகள் என அனைத்தையும் மையமாக கொண்டு உருவாகவுள்ளது. இந்த சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர்கள் அனைவரும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். 'கனா காணும் காலங்கள்' மூன்றாவது சீசனும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.