சுயமரியாதை முக்கியம்... CWC ஷோவில் இருந்து விலகிய மணிமேகலை..!

Manimegalai

குக் வித் கோமாளியிலிருந்து மணிமேகலை வெளியேறுவதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அனைத்து தரப்பிலும் ‘ஹிட்’ அடித்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமில்லாது, அனைத்து இடங்களிலிருந்தும் ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்துள்ளார். இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் எப்போதும் நான் கொடுப்பேன். அதேபோலதான் 2019 நவம்பரில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியுடன் எனது பயணம் தொடங்கியது.

ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன். சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் என எதுவாக இருந்தாலும், சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் இத்தருணத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டேன்.

இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். அவர் குக் என்பதையே மறந்து, தொகுப்பாளரின் வேலைகளை செய்ய விடாமல், நிறைய குறுக்கீடுகளை செய்கிறார். நமது உரிமைகளைக் கேட்பதும், கவலையை எழுப்புவதும் கூட இந்தப் சீசனில் குற்றமாகிவிடுகிறது. ஆனால் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அதற்கு நான் குரல் எழுப்புவேன். இந்த நிகழ்ச்சியின் உண்மைத்தன்மையை அந்த ஆதிக்கமும் எதிர்மறைகளும் கெடுத்துவிடுகிறது. நான் வேலை செய்த அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இல்லை.
 
நான் 2010 முதல் இந்தத் துறையில் இருக்கிறேன். தொகுப்பாளராக இது எனது 15வது ஆண்டு. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், இதுபோன்ற முதிர்ச்சியற்ற சம்பவங்களை அனுபவித்ததில்லை. ஆனால் எனக்கு இதை செய்த நபருக்கு நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு கடவுள் அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். வாழுங்கள் & வாழ விடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மக்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியில், ஆதிக்கம் இருக்கிறது எனக்கூறி ஒரு தொகுப்பாளர் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this story