ரெட் அலர்ட்... அரபிக் கடலில் உருவான ஷாகீன் புயல்... மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சமீபத்தில் குலாப் என்ற பெயரில் வங்கக் கடலில் உருவானது. இந்தப் புயல் கடந்த 26ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் அருகே கரையைக் கடந்தது. பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் கரையோர மக்களுக்கு பெரும் இடையூறாக அமைந்தது. குலாப் புயல் முழுமையாகக் கடக்கவில்லை. அதன் எச்சங்கள் தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக நகர்ந்து நேற்று தெற்கு குஜராத் பக்கம் சென்றன. இவையனைத்தும் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி, மேற்கு, வடமேற்கு திசையில் நகரும்.
இது நாளை காலைக்குள் வட அரபிக் கடலில் புயலாக உருவெடுக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஷாகீன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரை வைத்தது கத்தார் நாடு. இது பாகிஸ்தானில் கரையைக் கடக்கலாம் என்பதால் குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. இருப்பினும் இந்தியா-அண்டை நாடுகளுக்கிடையேயான எல்லையில் இருக்கும் மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஏனென்றால் இன்று முதல் 3 நாட்களுக்கு மகாராஷ்டிரா, குஜராத் கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குஜராத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடக்கு கொங்கன், குஜராத் கட்ச், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.