நீட் தேர்வு அச்சம் காரணமாக மேலும் ஒரு மாணவர் தற்கொலை!

நீட் தேர்வுக்கு அஞ்சி தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 19.
மருத்துவத் துறை நுழைவுத் தேர்வான நீட் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 889 பேர் உட்பட நாடு முழுவதும் 16 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்திலிருந்து 47 ஆயிரத்து 144 மாணவர்கள், 71 ஆயிரத்து 745 மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 18 நகரங்களில் மொத்தம் 224 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடக்கிறது . தமிழில் எழுதுவதற்கு 12 ஆயிரத்து 999 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 11 ஆயிரத்து 236 பேர் அரசு பள்ளி மாணவர்கள்.
தேர்வு எழுதும் முன்னரே தேர்வின் மீதான அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்த தனுஷ் (19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு பள்ளி வகுப்பை முடித்த இவர் 2 முறை நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்தாண்டு 3-வது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு பயம் காரணமாக தனுஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.