பொங்கலுக்கு இலவச பரிசுப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்

டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வரும் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை உருவாக்கவும் இலவச வேட்டி, சேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 1983-ஆம் ஆண்டு இந்த திட்டத்தை மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்து வைத்தார். நெசவாளர்களிடம் இருந்து வேட்டி-சேலைகளை கொள்முதல் செய்து அதை ஏழை-எளியவர்களுக்கு வழங்கும் வகையில் இத்திட்டம் அப்போது வரையறுக்கப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இலவச வேட்டி, சேலை ஆண்டுதோறும் பொங்கலையொட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வேட்டி, சேலைகள் பொங்கலையொட்டி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் இந்த திட்டத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
வேட்டி, சேலைகள் தயாரிப்பதற்காக சுமார் 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தப்போதிலும் நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வழக்கம்போல் பணியை ஆரம்பிக்கப்படவில்லை. மேலும் ஒரு லட்சத்து 30 அயிரம் விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ள லட்சணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இனி டெண்டர் விட்டு நூல் அனுப்ப முடிவு செய்தாலும் நூல்களுக்கு சாயம் இடும் பணிகள் அக்டோருக்குள் தான் முடியும். அதனால் வரும் பொங்கலுக்கு வழக்கம்போல் வேட்டி, சேலைகள் கிடைப்பது சந்தேகமே என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.