கேரளாவில் கொரானா பரவல் அதிகரிப்பு.. 2 வார முழு ஊரடங்குக்கு பரிந்துரை

கேரளாவில் கொரானா பரவல் அதிகரித்து வருவதால் 2 வார முழு ஊரடங்குக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரானாவின் 2வது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து. அதேநேரம் நாடு முழுவதும் கொரானா தடுப்பூசி போடும் பணியும் விரைவாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கொரானா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதில் கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் தொற்று சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருவது பீதியை கிளப்பியுள்ளது.
இதனால் கேரளாவில் உள்ள நிலைமையை ஆய்வு செய்ய மத்தியக் குழு ஒன்று அந்த மாநிலத்தில் சமீபத்தில் ஆய்வு செய்தது. அந்த குழு கொடுத்த அறிக்கையில் அடிப்படையில் 2 வார கால முழு ஊரடங்கு அமல்படுத்த கேரள அரசுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதேநேரம் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும், தடுப்பூசி பணிகள் வேகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.