நோக்கியா செல்போனை விழுங்கி மருத்துவர்களுக்கு ஷாக் கொடுத்த நபர்!

இளைஞர் ஒருவர் செல்போனை விழுங்கியதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
கொசாவை நாட்டைச் சேர்ந்த 33 வயது நபர் சில நாட்களுக்கு முன்னர் 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட நோக்கியா 3310 மாடல் செல்போனை விழுங்கியுள்ளார். அதையடுத்து அவருக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவர் செல்போனை தான் விழுங்கிவிட்டேன் என்று சொல்லவில்லை. பின்னர் ஸ்கேன் செய்து பார்த்ததில் செல்போன் மூன்று பாகங்களாகப் பிரிந்து கிடந்துள்ளது. செல்போன், பேட்டரி, செல்போன் பேக் என மூன்றும் வெவ்வேறு இடங்களில் இருந்தது ஸ்கேன் மூலம் தெரிய வந்துள்ளது.
பின்னர் இரண்டு மணி நேர தீவிர அறுவைச் சிகிச்சைப் பின்னர் அவரது வயிற்றிலிருந்து மொத்த செல்போனையும் வெற்றிக்கரமாக வெளியில் எடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "அந்நபரின் வயிற்றில் செல்போன் மூன்று பாகங்களாகப் பிரிந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். பேட்டரி மிகவும் அபாயகரமானது, ஏனென்றால் அதன் கெமிக்கல்கள் அவரது வயிற்றில் இருக்கும் வேதியியல் மூலக்கூறுகளுடன் சேர்ந்தால் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருந்தது. அதனால் மிகக் கவனமாக அறுவைச் சிகிச்சை செய்தோம்" என்றனர்.
அந்நபர் இதுவரை தான் ஏன் செல்போனை விழுங்கினேன் என்பது குறித்து வாயே திறக்கவில்லை. இதுபோன்ற சம்பவம் உலகில் பலமுறை நடந்திருப்பது குறிப்பிடத்தக்து.