"ஈயம் பூசுன மாறியும்... பூசாத மாறியும் இருக்கனும்" - சிலிண்டர் மானியத்தில் மத்திய அரசின் குட்டு உடைந்தது!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சதத்தைத் தாண்டி செல்கிறது. இந்த எரிபொருள்கள் போக்குவரத்துக்குப் பிரதானமாகப் பயன்படுகின்றன. இது பொருட்களுடைய விலைகளின் மீதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். இதுவே பெரும் பாரமாக இருக்கையில் மற்றொரு பாரமாக சிலிண்டர் விலையும் அன்றாட வாழ்க்கையை மலைப்புடனே பார்க்க வைக்கிறது.
மானியம் மானியம் என ஒன்றை சொன்னார்களே அது இப்போது கிடைக்கிறதா, இல்லையா என்பதே பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது. உண்மையில் மானியம் வருகிறதா? ஆம் வருகிறது. வருகிறதென்றால் எவ்வளவு? இரண்டு டீ வாங்கும் விலைக்கு வருகிறது. அதாவது 20 ரூபாய் தான் நமக்கு மானியமாகக் கிடைக்கிறது. உண்மையில் மக்களுக்கு மானியம் கிடைக்காத சூழலுக்கு நகர்த்தும் வேலையை மத்திய அரசு கணக்கச்சிதமாக அரங்கேற்றி வருகிறது. பெட்ரோலுக்கும் இதேபோன்றதொரு வேலையை முந்தைய மத்திய அரசு செய்தது.
தற்போதைய அரசு சிலிண்டர் கேஸ்க்கு செய்கிறது. சிலிண்டர் விலை ஏன் ஏறுகிறது என்று கேட்டால், எண்ணெய் நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயம் செய்கின்றன. அவர்களைத் தான் கேட்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. ஆனால் அந்த விதியை மாற்றியது அதே மத்திய அரசு தான். ஆரம்பத்தில் பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலையை நிர்ணயித்தது மத்திய அரசே. அதற்குப் பின் தான் இந்த மாற்றம். இந்த மாற்றம் நிகழ்ந்த பின்பு தான் தாறுமாறாக விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் என்றால் மானியத்தை குறைத்துக் கொண்டே வருகிறது.
முதலில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியத்தை வழங்கி மக்களுக்கு குறைந்த விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. அதை அப்படியே மாற்றி மக்கள் மானியத்தையும் சேர்த்து பெருமளவு தொகையை சிலிண்டருக்காக செலவளித்தனர். அதற்குப் பின் மத்திய அரசு மக்களின் வங்கி கணக்குகளில் மானியத்தைச் செலுத்தியது. 2015ஆம் ஆண்டு சிலிண்டரின் விலை 998 ரூபாயாக இருந்தது. அதில் 563 ரூபாயை அரசு மானியமாக வழங்கியது. மக்கள் செலுத்த வேண்டிய தொகை 450 ரூபாய் மட்டுமே. மானியத்தை நம்பி கடன் வாங்கியாவது சிலிண்டரை வாங்கினர்.
ஆனால் தற்போது மானியம் முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 900 ரூபாய். அதில் கிடைக்கும் மானியம் வெறும் 24 ரூபாய். மானியம் உள்ள சிலிண்டர் விலையும் மானியமற்ற சிலிண்டர் விலையும் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. விஷயம் இப்படியிருக்கையில் இந்த மானியத்தைக் கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் தான் என்ன? மானியம் கொடுத்துவிட்டோம் என பெயருக்கு கணக்கு காட்ட மக்கள் தலைகள் மத்திய அரசுக்கு கிடைத்ததா என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றன. சென்ற நிதியாண்டில் 40,915 கோடி ரூபாய் மானியத்திற்கென ஒதுக்கப்பட்டது.
ஆனால் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அந்த மானியம் வெறும் 12,995 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்ற ஆண்டு சிலிண்டர் மானியமாக அரசு தரப்பிலிருந்து மொத்தம் 16,461 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் வெறும் 1,233 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நமக்கு அறிய வரும் செய்தி மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மானியம் இல்லா சிலிண்டர் வாங்கும் மனநிலைக்கு மக்களை மறைமுகமாக அழைத்துச் செல்கிறது என்பதே. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஈயம் பூசியது போலும் இருக்க வேண்டும்; பூசாதது போலவும் இருக்க வேண்டும்.