2 ஆண்டுகளாக கழிப்பறையில் குடும்பம் நடத்தும் பெண்... இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் !

கடந்த 2 ஆண்டுகளாக பெண் ஒருவர் குழந்தைகளுடன் கழிப்பறையில் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், மஹாபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. கூலி வேலை செய்து வந்த இவரின் கணவர், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரை நம்பி அம்மா, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். திடீரென சுஜாதாவின் கணவர் இறந்துவிட வறுமையில் கஷ்டப்பட்டு வந்தனர். இதையடுத்து மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் தங்கியிருந்த வீடும் இடிந்து விழுந்துவிட்டது.
இதனால் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் குடும்பத்துடன் சுஜாதா சில நாட்கள் தங்கியிருந்தார். மழை குறைந்து சகஜ நிலை திரும்பவே சமுதாயக்கூடத்தில் இருந்த இவர்களை உள்ளுர் நிர்வாகம் வெளியேற்றியது. வாழ வழியின்றி தவித்த இவர்கள் அதே பகுதியில் அரசு கட்டியிருந்த பொது கழிப்பறையை வீடாக மாற்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த இடத்திலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய சுஜாதா, கடந்த இரண்டு வருடங்களாக நானும், எனது மாமியாரும் கழிப்பறைக்கு வெளியும், எனது இரண்டு குழந்தைகள் கழிவறைக்கு உள்ளேயும் தூங்குவோம். மழை பெய்யும் காலங்களில், குழந்தைகளை உள்ளே தூங்க வைத்து விட்டு, நான் தூங்கவே மாட்டேன். அரசு ஒதுக்கீடு செய்யும் வீடுகள் எங்களை போன்ற ஏழைகளுக்கு வந்து சேருவதில்லை என்று கண்ணீருடன் கூறினார். இது குறித்து செய்திகள் ஊடகங்கள் மூலம் வெளியே வர உள்ளூர் நிர்வாகம் வீடு கட்டி கொடுக்க முன் வந்துள்ளது. இந்தியாவை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.