மறைந்திருந்து தாக்குதல்... வாக்கிங் ஸ்டிக்கால் வெளுத்துவிட்ட மூதாட்டி - தெறித்து ஓடிய சிறுத்தை!

சிறுத்தை

புலியை அரிசி புடைக்கும் முறத்தால் அடித்து விரட்டினாள் வீர தமிழச்சி என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவதுண்டு. இதை நாம் சிறு வயதிலேயே ஏட்டில் கற்று தெரிந்திருப்போம். அப்படி படித்திருக்கா விட்டாலும் அண்ணன் சீமான் அடிக்கடி இதனை உதாரணம் காட்டுவார். இது மட்டுமல்லாமல் சிறுத்தையை உலக்கையால் அடித்து விரட்டி மற தமிழச்சிக்கான சான்றுகளும் உள்ளன. இதெல்லாம் பெண்களின் வீரத்தைப் பறைசாற்றக் கூடியவை. சங்க காலங்களில் நடந்தவை. நாம் வாழும் நிகழ் காலங்களில் இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை.சிறுத்தை

ஆனால் இனி அப்படி சொல்ல முடியாது. ஆம் சிறுத்தையை வாக்கிங் ஸ்டிக்கால் அடித்து விரட்டியிருக்கிறார் மூதாட்டி ஒருவர். தமிழ்நாட்டில் அல்ல மும்பையில். எங்கிருந்தாலும் அவரும் ஒரு பெண் தானே. மும்பை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. சமீபத்தில் கோரேகாவ் ஆரேகாலனி பகுதியில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை சைலண்டாக தூக்கிச் சென்றது. ஆனால் ஒரு வாலிபர் விடாமல் துரத்தி சிறுவனைக் காப்பாற்றினார். 

இச்சூழலில் மும்பை கோரேகான் பகுதியில் உள்ள வீட்டில் வசிக்கும் வயதான பெண்மணி ஓய்வெடுப்பதற்காக வீட்டின் கொள்ளை புறத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் அவருக்கூ முன்பாகவே சிறுத்தை ஒன்று அங்கே டேரா போட்டிருக்கிறது. இதைக் கவனிக்காமல் அந்த மூதாட்டி ஹாயாக காத்து வாங்க, அவருக்கு பின்பகுதியிலிருந்து மறைந்திருந்த சிறுத்தை சமயம் பார்த்து அவரைத் தாக்கியுள்ளது. சிறுத்தையின் இடத்தில் ஒரு வில்லனை வைத்து பார்த்தால் படுபயங்கரமான சினிமா சீன் தான் போலவே இருக்கும். சற்று பயந்துபோன மூதாட்டி தற்காப்பு கலையைக் கையிலெடுத்தார். 

ஆம் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து சிறுத்தையை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார். லெப்ட் அண்ட் ரைட் அடி வாங்கிய சிறுத்தை இதற்கு மேல் சமாளிக்க முடியாதுடா சாமி என்பது போல் மூதாட்டியைக் கண்டு அஞ்சி நடுங்கி தெறித்து ஓட்டம் பிடித்தது. இருப்பினும் லேசான காயங்கள் ஏற்பட்டதால் மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேற்கொண்ட காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.  இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் செம டிரெண்டிங் ஆக அனைவரும் மூதாட்டியின் தைரியத்தை மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.
 

Share this story