மனித கழிவுகளை அகற்றுபவர்கள் மரணித்தால் அரசே பொறுப்பு - மனித உரிமை ஆணையம் எச்சரிக்கை!

தொழில்நுட்பம் வேகமாக முன்னேறுகிறது; டிஜிட்டல் இந்தியா பிறந்துவிட்டது என நாம் உள்ளூர தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் நடந்து செல்லும் சாலையிலுள்ள கால்வாயில் ஒருவர் கழிவுகளை அகற்றிக் கொண்டிருக்கிறார். அதைக் கண்டு உண்மையில் நாம் பொங்க வேண்டும். நம்மைப் போன்ற மனிதர் ஒருவர் நம்முடைய கழிவுகளை அகற்றுகிறாரே இதற்கு ஒரு தீர்வு கொண்டுவாருங்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி செய்கிறோமா? அவர்களைக் கண்டால் முகத்தைக் கோண வைத்து பத்தடி நகர்கிறோம்.
இது ஒருபுறம் என்றால் தினமும் பாதுகாப்பின்றி கழிவுகளை அகற்றும் அவர்களில் சிலர் மரணிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் மாதத்தில் இரண்டு, மூன்று மரணங்களாவது நிகழ்ந்துவிடுகிறது. இந்த மரண செய்திகளைப் படித்துவிட்டு உச் கொட்டிவிட்டு நாம் அடுத்த வேலையைப் பார்த்து நகர்ந்துவிடுகிறோம். ஆனால் இதெற்கெல்லாம் யார் பொறுப்பெடுத்துக் கொள்வது? மரணித்தவர்களின் குடும்பத்திற்கு என்ன பதில் சொல்வார்கள்? அவர்களுக்கு யார் நிதியுதவி அளிப்பது? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை 2,000 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. அல்லது விடையைத் தேட யாருக்கும் மனமில்லை.
இச்சூழலில் தான் தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய அரசுக்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அக்கடிதத்தில் மனித கழிவுகளை அள்ளுபவர்கள் மரணித்தால் அதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண்குமார் மிஸ்ரா மத்திய அமைச்சரவையின் அனைத்து துறைகளுக்கும், மாநில தலைமைச் செயலர்களுக்கும் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அபாயகரமான உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய கழிவுகளை அகற்றுபவர்கள் உயிரிழந்தால் உள்ளூர் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரை பொறுப்பு ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதாவது அவர்களின் பாதுகாப்பை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் உறுதிசெய்ய வேண்டும். அவர்களை முன்களப் பணியாளர்களாகக் கருதி பாதுகாப்புக்காக கையுறை, தலைக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.