போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் உடலை காலால் மிதிக்கும் புகைப்படக்காரர்... வைரலாகும் வீடியோ!

assam-3

அசாமில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்தை புகைப்படக்காரர் காலால் மிதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அசாம் மாநிலம் தரங் மாவட்டம் தால்பூர் பகுதியில் சுமார் 2,800 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் மூலமாக அந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் அந்த நிலங்களை மீட்க அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை 487 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள நிலங்களையும் மீட்பதற்காக போலீசார் அங்கு குவிந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாங்கள் வசிக்கும் இடங்களை கைப்பற்றக்கூடாது என போராடிய மக்களை விரட்ட போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அதில் இருவர் உயிரிழந்ததும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளும் அரசான பாஜக தூண்டுதல் பேரிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்தை புகைப்படக்காரர் காலால் மிதித்து கடுமையாகத் தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


assam

Share this story

News Hub