பட்டபகலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை.. மீண்டும் ஒரு நுங்கம்பாக்கம் சம்பவமா ?

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை குத்தி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016- ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார வண்டிக்காக ஏறுவதற்காக நின்றிருந்த சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் பட்டபகலில் இளைஞர் ஒருவரால் வெட்டிக் கொல்லப்பட்டார். தமிழகத்தையே உலக்கிய இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதேபோன்றதொரு சம்பவம் மீண்டும் சென்னை தாம்பரத்தில் நடைபெற்றுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு சுவேதா (25) என்ற மகள் உள்ளார். சுவேதா, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றில் படித்து வருகிறார். இவர் திருக்குவளை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுவேதாவும், ராமச்சந்திரனும் தாம்பரம் ரயில் நிலையம் அருகே நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், ராமச்சந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் சேலையூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.