மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்க "வீடு தேடி பள்ளிகள்" - அறிமுகமாகும் புதிய திட்டம்!

கொரோனா பரவலால் கிட்டத்தட்ட 2 வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் அனைவருக்குமே ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஸ்மார்ட்போன் வசதி கொண்ட சிறுவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தாலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருந்தது. இதனால் கல்வி கற்பதில் ஒருவித ஏற்றத்தாழ்வு உருவானதை எவராலும் மறுக்க முடியாது. அதேபோல கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பலருக்கு பாடங்கள் மறந்துவிட்டன என்பதே உண்மை.
இந்தக் கற்றல் இடைவெளியைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கைகளின் போதே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்திருந்தார். அதன்படி தற்போது மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தைப் பள்ளிக்கல்வித் துறை அறிமுகப்படுத்த உள்ளதாக துறை சார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது வரும் அக்டோபர் மாதம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையிலுள்ள மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்டு, பின் தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களை ஒன்றிணைத்து தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்துவார்கள்.
இவர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இத்திட்டம் தொடங்கப்படும். பள்ளிகள் திறந்த பின்னரும் கூட மாலை நேரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.