“பார்த்திபனுக்கு எப்படி விருது குடுக்குறதுனே தெரியல”… ஒத்த செருப்பு தேசிய விருது வென்றது குறித்து கங்கை அமரன்!
நேற்று 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தேசிய விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
இந்த வருடம் தென்னிந்தியத் திரையுலகம் பல தேசிய விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்கள் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்க மறுபுறம், திறமையான பல கலைஞர்களுக்கு விருது கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் இந்த ஆண்டு தேசிய விருது நடுவர் குழுவில் தென்னிந்தியத் திரையுலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மன்றத்தில் இடம் பெற்றிருந்தார்.

எனவே பத்திரிகையாளர்களிடம் பேசிய கங்கை அமரன், “நாங்கள் இந்த படங்களைப் பார்க்கத் தொடங்கி சரியாக ஒரு மாதம் ஆகிவிட்டது. நாங்கள் இதற்காக சுமார் 105 அல்லது 106 திரைப்படங்களைப் பார்த்திருப்போம். தேர்வு செய்வது கடினமாக இருந்தது. ஏனெனில் பல புதிய மொழிகளின் திரைப்படங்கள் களத்தில் இறங்கியுள்ளன. அவற்றை ஊக்குவிக்க, நாங்கள் சில விஷயங்களில் சமரசம் செய்தோம்.” என்று தெரிவித்தார்.
மேலும் “தமிழ் சினிமாவுக்கு ஏழு முதல் எட்டு விருதுகள் கிடைத்துள்ளன. அதற்காக நான் திருப்தி அடைகிறேன். நான் இதற்காக போராடுமாறு இருக்கவில்லை. அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர், சிறந்த தமிழ் திரைப்படம் விருது வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபனுக்கு எந்த விருது வழங்கவேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் அந்தப் படத்தில் நடிப்பு, இயக்கம், கதை, வசனம் என அனைத்தையும் செய்துள்ளார். எனவே அவருக்கு ஒரு விருது என்று தெரிவித்தனர். நான் எந்த பிரிவில் என்று கேட்டதற்கு அவர் அனைத்து பிரிவிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்றதும், எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது” என்றும் தெரிவித்தார்.