கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்… தமிழ்நாட்டின் மாஃபியா பற்றிய படம்!?
இயக்குனர் கேவி ஆனந்த் கடைசியாக சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை அவர் இயக்கவிருப்பதாகக் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசியலில் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில் கேவி ஆனந்த் தேர்ந்தவர். எனவே சிவகார்த்திகேயனுக்காக அவர் ஒரு அரசியல் சார்ந்த கதையைத் தயார் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

தற்போது கேவி ஆனந்த் இந்தப் படம் குறித்து பேசியுள்ளார். “நான் சிவகார்த்திகேயன் உடன் பணியாற்ற விரும்புகிறேன் என்றாலும், அந்த செய்தி உண்மையில்லை. அவருடன் பணியாற்ற, அவருக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் எனக்கு தேவை. அப்படி நடந்தால் நாங்கள் இணைந்து பணியாற்றலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கேவி ஆனந்த் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாஃபியாவைச் சுற்றி நடக்கும் கதையை எழுதி வருகிறாராம்.

“அரசியல், அரசாங்கம், சட்டம் என எல்லா துறைகளிலும் மாஃபியா உள்ளது. நாயகன் போன்ற மும்பையில் நடக்கும் மாஃபியா பற்றிய படங்கள் நம்மிடம் உள்ளன. நான் நம் மாநிலத்தில் நடக்கும் மாஃபியாவை காண்பிக்க விரும்பினேன். இது வழக்கமாக நடக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அந்த விஷயங்கள் பொதுமக்களுக்கு தெரிந்திருக்காது.
மாஃபியாவிற்கும் ரவுடிசத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இது அரசியல்வாதிகளை உள்ளடக்கியது. ஆனால் இது ஒரு அரசியல் படமாக இருக்காது. இது ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும், மேலும் இந்தப் படத்தில் ரொமான்ஸ் கூட உண்டு” என்றும் தெரிவித்துள்ளார்.