‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது!

பிரபல நடிகர்-இயக்குனர்-எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட விசு தனது மேடை நாடகமான ‘உறவுக்கு கை கொடுப்போம்’ என்பதை ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற பெயரில் படமாக உருவாக்கினார். அப்படம் தமிழக மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றது. அந்தப் படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தன.
ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் இப்படத்திற்குக் கிடைத்தது. சிறந்த பிரபல திரைப்படம் என்ற தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படமும் கூட. 1986-ம் ஆண்டு வெளியான இப்படமா இன்றும் டிவியில் ஒளிபரப்பானால் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கதையை இறப்பதற்கு முன்பே விசு எழுதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை பாஸ்கர்ராஜ் என்பவர் இயக்குகிறார். தற்போது நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களைத் தேர்வு செய்து வருகின்றனர். மேலும் ஒரு முக்கிய பாத்திரத்திற்காக ராஜ்கிரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் இரண்டாம் பாகம் தான் விசு கடைசியாக கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதிய கடைசி படம் என்று கூறப்படுகிறது. விசுவின் மகள் லாவண்யா இப்படத்திற்கு டயலாக் எழுதுகிறார். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராஜா என்பவர் தயாரிக்கிறார்.

