அண்டா பாலில் அபிஷேகம்: மன்னிப்பு கேட்ட சிம்பு

அண்டா பாலில் அபிஷேகம்: மன்னிப்பு கேட்ட சிம்பு

பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சென்னை: பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,’ வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும் அன்று பால் அபிஷேகம், பெரிய கட் அவுட், பேனர் எல்லாம் வேண்டாம். அதற்கு பதிலாக உங்களுடைய அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, சகோதர சகோதரிகளுக்கு முடிந்ததை செய்யுங்கள் எனத் தெரிவித்திருந்தார். ஆனால்  இது குறித்து நெட்டிசன்கள், உங்களுக்கு தான் ரசிகர்களே இல்லையே என்று  கிண்டல் செய்யக் கடுப்பான சிம்பு மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

அதில், ‘இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பிளெக்ஸ், கட் அவுட் வைக்கிறீங்க. பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வேற லெவலில் செய்றீங்க. இதுதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழி லாளர்கள் நலச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்ததோடு  காவல் ஆணையர் அலுவலகத்திலும், புகார் அளித்தனர்.

 

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கட் அவுட் வைக்கும் போது ஏற்பட்ட பிரச்னையில் எனது ரசிகர் இறந்ததால் நான் வேதனையில் இருந்தேன். அதனால் தான் பால் அபிஷேகம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அது எல்லாரையும் சென்றடையவில்லை. பின்னர் நெகட்டிவாக கருத்து சொன்னேன். பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தாலும் நான் மன்னிப்பு கோருகிறேன். படம் பார்க்க வருபவர்களுக்கு அண்டா நிறைய பால் காய்ச்சு ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன். நான் மாற்றிப் பேசவில்லை, எல்லாரையும் மாற்ற வேண்டுமென்றுதான் பேசுகிறேன். இப்போதும் சொல்கிறேன். அண்டா நிறைய பால் ஊற்றுங்கள். பேசாத கட் அவுட்டுக்கு ஊற்றாமல் படம் பார்க்க வருபவர்களுக்குக் கொடுங்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறியதை மறப்பவன் இல்லை நான். என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அது யார் என தெரியாது’ என்றார்.

Share this story