பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!
அனுராக் காஷ்யப் மீதான பாலியல் புகாரில், அவர்மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட இவர், தமிழில் ‘இமைக்க நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகை பாயல் கோஷ், அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் தெரிவித்தார். 2013ஆம் ஆண்டு தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார். பாலிவுட்டில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனுராக் காஷ்யப்பிற்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்தன. நடிகை கஸ்தூரியும் அனுராக்கிற்கு ஆதரவாக ட்வீட் செய்தார்.
இந்நிலையில், மும்பையிலுள்ள வெர்ஸோவா காவல் நிலையத்தில் அனுராக் மீது பாலியல் புகார் அளித்துள்ளார் பாயல் கோஷ். தன்னுடைய வழக்கறிஞர் நிதி சட்புதேவுடன் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் புகார் அளித்துள்ளார்.
பாயல் கோஷ் அளித்த புகாரின் பேரில், அனுராக் மீது முதல் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. 376, 354, 341, 342 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளிக்க கடந்த திங்கட்கிழமை சென்றுள்ளார் பாயல் கோஷ். ஆனால், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடம் வெர்ஸோவா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், அங்கு செல்ல போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தன் மீதான புகாருக்கு அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர்மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.