சோனு சூட் உண்மையிலே உதவி செய்கிறாரா? இல்லை நடிப்பா!? கலெக்டரின் பதிவால் பரபரப்பு!
பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த நிலையில் பலருக்கு உதவினார். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்தது முதல் தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவது வரை தொடர்ந்து உதவி வருகிறார் சோனு சூட்.
அதே நேரத்தில் இவ்வளவு உதவி செய்யும் சோனுவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று பலர் கேள்வியையும் எழுப்பத் தொடங்கினர். மேலும் சமூக வலைத்தளங்களில் கேட்கப்படும் உதவிகளுக்கு உடனே ஏற்பாடு செய்த்துவிட்டதாக பதிலளித்து வருவதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில், கஞ்சம் மாவட்டத்தின் கலெக்டர் தற்போது சோனு சூட் குறித்து வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சம் சிட்டி மருத்துவமனையில் படுக்கைகள் ஏற்பாடு செய்துள்ளதாக சோனு சூட் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் “சோனு சூட் தரப்பிலிருந்து கஞ்சம் சிட்டி மருத்துவமனைக்கு எந்த தொடர்பும் மேற்கொள்ளப்படவில்லை. உதவி கோரியவர் வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். படுக்கைக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை” என்று கஞ்சம் மாவட்ட கலெக்டர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து சோனு சூட் அதற்கு பதிலளித்தார். “சார், நாங்கள் உங்களைத் தொடர்பு கொண்டோம் என்று கூறவே இல்லை. உதவி தேவைப்பட்டவரைத் தான் நாங்கள் தொடர்பு கொண்டோம். நாங்கள் அவருக்காக படுக்கையை ஏற்பாடு செய்தோம். அதற்கான சாட் செய்யப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்களையும் இணைத்துள்ளேன். உங்கள் அலுவலகம் சிறப்பாக வேலை செய்து வருகிறீர்கள். நீங்கள் வேண்டுமானால் நாங்கள் கூறும் தகவலை இருமுறை சரிபார்த்துக் கொள்ளலாம். அவரது தொடர்பு விவரங்களை உங்களுக்கு நேரடி மெசேஜில் அனுப்பியுள்ளேன். ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.
“உங்கள் இயக்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் கிடையாது. 24 மணி நேரமும் நோயாளிக்கு படுக்கை கிடைப்பதை உறுதிசெய்ய நாங்கள் கஞ்சம் மாவட்டத்தில் தனி டீம் வைத்துள்ளோம். படுக்கை கிடைப்பது குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் விசாரிக்க வேண்டியது எங்கள் கடமையாகும். அதனால்தான் நாங்கள் உண்மைகளை எடுத்துக் கூறினோம். நீங்களும் உங்கள் நிறுவனமும் மிகச் சிறந்த வேலை செய்து செய்கிறீர்கள்.” என்று கஞ்சம் மாவட்ட கலெக்டர் பதிலளித்துள்ளார்.