ஏமாற்றுக்காரர் என்று கூறுபவர்களுக்கு சோனு சூட் கொடுத்த பதிலடி!

நடிகர் சோனு சூட் தன்னை ஏமாற்றுக்காரர் மற்றும் விளம்பரங்களுக்காக உதவி செய்பவர் என்று கூறுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்கள் முன் தன்னுடைய உதவிகள் மூலம் நிஜ வாழ்விலும் ஹீரோவாக தெரிந்தார் சோனு சூத். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். இன்னும் லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகிறது.
சமீபத்தில் மோஜோ ஸ்டோரி என்ற இணைய தளத்துடன் பேசிய அவர் தன்னை ஏமாற்றுக் காரர் என்று கூறுபவர்களுக்கு பதிலளித்தார்.
”நான் எதுவும் செய்யவில்லை என்று கூறுபவர்களுக்கு, எனது பதில் என்னவென்றால், நான் உதவி செய்த 7,03,246 பேரின் தகவல்கள் என்னிடம் உள்ளது. அவர்களுடைய முகவரிகள், தொலைபேசி எண்கள், ஆதார் அட்டை எண்கள் என்னிடம் உள்ளன. வெளிநாட்டிலிருந்து வர நான் உதவிய அனைத்து மாணவர்களின் அனைத்து விவரங்களும் என்னிடம் உள்ளன. நான் தெளிவுபடுத்த விரும்பவில்லை, ஆனால் என்னிடம் தரவு உள்ளது. என்னை ட்ரோல் செய்வதற்கு பதிலாக, வெளியே சென்று ஒருவருக்கு உதவுங்கள். ” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அனைவரின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அவர் இப்போது வரை அரசியலில் சேர எந்த திட்டமும் இல்லை என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

