‘வலிமை’ திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யார்? படக்குழு உறுதி!
இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யாமினி கவுதம் நடிக்கிறார்.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யாமினி கவுதம் நடிக்கிறார்.
இந்த படத்தில் அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்று உறுதியாகியுள்ள நிலையில் மற்றொரு கதாபாத்திரம் சஸ்பென்ஸாகவே உள்ளது. போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால் கார் சேசிங் காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது. வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்துக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா தான் வலிமை படத்துக்கும் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென டி. இமான் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
தற்போது இந்த செய்தியைப் படக்குழு மறுத்துள்ளது. இதுகுறித்து ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், வலிமை படக்குழுவில் எந்த மாற்றமுமில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் யுவன் தான் வலிமை இசையமைப்பாளர் என்பது உறுதியாகியுள்ளது.