கலைமாமணி விருது வழங்கும் விழா… திரை நட்சத்திரங்களுக்கு வழங்கினார் முதல்வர் !
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு உள்ளிட்ட திரைப்பிரபலங்களுக்கு கலைமாமணி விருது இன்று வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இயல், இசை, நாடகம் என கலைத்துறையில் சாதனை புரிந்த பிரபலங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி 2019 -2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பிரபலங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

மேலும் நடிகைகள் சங்கீதா, மதுமிதா, தேவதர்ஷினி, இயக்குநர்கள் கவுதம் மேனன், ரவிமரியா, பாடகர்கள் ஜமுனா ரவி, அனந்து, சுஜாதா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் டி இமான், தீனா உள்ளிட்ட 42 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் 2019-ம் ஆண்டுக்கான முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா விருது, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி பி.சுசீலா, நடன கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோருக்கும், 2020-ம் ஆண்டுக்கான விருது பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடன கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. கலைமாமணி விருதுபெற்ற பிரபலங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.