வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு நிறைவு... முழு வீச்சில் தயாரிப்பு பணிகள் !
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி இயக்குனராக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாகவும், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. காடு மற்றும் மலை என அடர்ந்த பகுதியில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.