‘கண்ணுக்குள் நிலவு’ பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்!
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 71.தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் விளங்கிய மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர், நேற்றிரவு காலமானார். இவர் ஸ்ரீராஜகாளியம்மன் மூவிஸ் முலம் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.
இதன்படி, கடந்த 1986ஆம் ஆண்டு சுரேஷ், நதியா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பூக்களை பறிக்காதீர்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் மோகன் நடராஜன். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த பூ மழை பொழியுது, பிரபு நடித்த என் தங்கச்சி படிச்சவ, சத்யராஜின் வேலை கிடைச்சிருச்சு, கோட்டைவாசல், சாமுண்டி, விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல் மற்றும் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும், நம்ம அண்ணாச்சி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில், இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை சென்னை திருவொற்றியூரில் நடைபெற உள்ளது.