‘கேம் ஓவர்’ பட இயக்குனரின் பெயரில் நடந்துள்ள மோசடி… எச்சரிக்கை அளித்த இயக்குனர்!
சமீப காலங்களாக பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. போலியான ஆடிஷன்களை நடத்தி நடிகர்கள் / நடிகைகளை மோசடி செய்து செய்கிறார்கள். பெண்களிடம் பட வாய்ப்பு தருவதாகக் கூறி அவர்களை தங்கள் ஆசைக்கு இணங்கச் சொல்கின்றனர். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகோண்டா பெயரை பயன்படுத்தி இது போல் ஒரு மோசடி சம்பவம் நடந்தது. அதையடுத்து அந்நிறுவனம் எச்சரிக்கை தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
தற்போது அதே போல் இயக்குனர் அஸ்வின் சரவணன் பெயரைப் பயன்படுத்தி ஒரு மோசடி நடைபெற்றுள்ளது. அஸ்வின் சரவணன் புதிதாக இயக்கும் படத்திற்கு ஆடிஷன் நடப்பதாகக் கூறி பெண்களை பாலியல் ரீதியாக இணங்கச் சொல்லும் வாட்ஸ்அப் உரையாடல்களைப் பகிர்ந்த அஸ்வின் இது குறித்து எச்சரித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
“AAA Fel!s Creations என்ற நிறுவனம் திரைத்துறையில் சில பிரபலமான நபர்களின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்து வருகிறார்கள். என்னுடைய பெயரைப் பயன்படுத்தி இல்லாத ஒரு படம் உருவாவதாகக் கூறி பெண்களை தங்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
கீகழண்ட ஸ்கிரீன் ஷாட்கள் இன்று எனக்குக் கிடைத்தது. இது போன்ற ஒரு சில கீழ்த்தரமானவர்கள் சினிமா ஆசையோடு வரும் பெண்களை அழித்து வருகிறார்கள் என்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன்.
திரைத்துறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மாறும் என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற போலி ஆடிசன்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தகவலை எப்போதும் இருமுறை சரிபார்க்கவும், தனிப்பட்ட உரையாடல்களை ஒருபோதும் நம்ப வேண்டாம். பத்திரமாக இருக்கவும். உள்ளேயும் வெளியேயும்” என்று தெரிவித்துள்ளார்.
அஸ்வின் சரவணன் டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கியிருந்தார்.